திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சமையல் சீனா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமாவும், பெண்கள் புடவை, சுடிதார் அணிந்திருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆடை கட்டுப்பாட்டை போன்று திருமலை முழுவதும் உணவுமுறைகளில் கட்டுப்பாடு கொண்டுவர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக தேவஸ்தானம் வழங்கும் அன்னபிரசாதம் தவிர, தனியார் ஓட்டல்களில் விற்கப்படும் சைனீஸ் உணவுகளை தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவக உரிமையாளர்களுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யசவுத்ரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது வெங்கய்ய சவுத்ரி பேசுகையில், ‘திருமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தேவஸ்தானம் வழங்கக்கூடிய அன்னபிரசாதம் சாப்பிடுகின்றனர். ஆனால் சிலர், தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடக்கூடிய பக்தர்களுக்கும் சம்பிரதாய முறைப்படி தயார் செய்யக்கூடிய உணவுகள் மட்டுமே வழங்கவேண்டும். இனி வருங்காலங்களில் சைனீஸ் உணவு பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. இதற்கு திருமலை முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது’ என்றார்.இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், இனி, படிப்படியாக சைனீஸ் உணவு வகைகளை குறைத்துக்கொள்வதாக உறுதியளித்தனர். இதனிடையே பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடும் சைனீஸ் உணவு முறைக்கு கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதல்ல என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *