கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-
சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் கிறிஸ்துமஸ்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
அன்பின் திருஉருவம், கருணையின் மறுவடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து சமூக சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது.
ப.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.