உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும ரீசா ஹென்ரிக்ஸ களத்தில் இறங்கினர்.
குவின்டன் டி காக் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த ஹென்ரிக்ஸ் வான்டர் டசன் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. 60 ரன்கள் எடுத்திருந்தபோது வான்டர் டசன் ஆட்டமிழந்தார். ரீசா ஹென்ரிக்ஸ் 85 ரன்கள் சேர்க்க, கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
36.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா 243 ரன்கள் எடுததிருந்தது. இதன்பின்னர் இணைந்த ஹென்ரிக் கிளாசன் – மார்கோ ஜேன்சன் இணை இங்கிலாந்து பவுலிங்கை வெளுத்தெடுத்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியும் பறக்க ஸ்கோர் உயரத் தொடங்கியது. 4 சிக்சர் 12 பவுண்டரியுடன் 67 பந்துகளில் கிளாசன் 109 ரன்கள் எடுத்தார்.
6 சிக்சர் 3 பவுண்டரியுடன் ஜேன்சன் 42 பந்துகளில் 75 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 399 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 10 ரன்னும், டேவிட் மாலன் 6 ரன்னும், ஜோ ரூட் 2 ரன்னும், பென் ஸ்சூடாக்ஸ் 5 ரன்னும் எடுத்தனர். ஹேரி ப்ரூக் 17 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் ஜோஸ் பட்லர்15 ரன்னில் வெளியேறினார். 16.3 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து அணி தனது 8 ஆவது விக்கெட்டை இழந்திருந்தது. இதன்பின்னர் 10-20 ரன்களில் ஆல் அவுட் ஆகிவிடும் என்று ரசிகர்க எதிர்பார்த்தனர். அப்போது இணைந்த கஸ் அட்கின்சன் – மார்க் வுட் இணை டி20 மேட்ச்சைப் போல அதிரடியாக ரன்களை சேர்த்தது.5 சிக்சர் 2 பவுண்டரியுடன் மார்க் வுட் 43 ரன்களும், 7 பவுண்டரியுடன் அட்கின்சன் 35 ரன்களும் எடுத்தனர். 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
