நார்வே நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு கடுமையான வாக்குவாதத்தில் முடிவடைந்தது.இந்த விவகாரம் உலகளாவிய அளவில் முக்கியமான விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் இருந்து உக்ரைனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் தரப்புக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக உள்ள நார்வேயின் எரிபொருள் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேயின் ‘ஹால்ட்பக் பங்கர்ஸ்’ என்ற நிறுவனம், அமெரிக்க ராணுவத்திற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும், இதனால் அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 3 மில்லியன் லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது, தற்போது தடைபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்தி வரும் நார்வே அரசு, நார்வே துறைமுகங்களில் அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைக்கும் என உறுதியளித்துள்ளது.
