கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக மலையை குடையும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், அப்பகுதியில் உள்ள ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில், ஒரு வீட்டில் வசித்து வந்த பைஜூ – சந்தியா தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 7 மணி நேரம் போராடி காங்கிரீட் குவியலுக்கு மத்தியில் சிக்கியிருந்த தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் பைஜூ உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடிவாரத்தில் உள்ள 22 வீடுகளில் வசித்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

