2024ம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – சிங்கப்பூர் இடையே, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், ஸ்கூட்,.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படுகின்றன.சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் டில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 280 விமானங்கள் வந்து செல்கின்றன.
தெற்காசிய நாடுகளில் இந்தியாவுடன் மிக அதிக விமான போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விளங்குகிறது. 2024ல் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டை விட 15 சதவீதமும், 2023ம் ஆண்டை விட 12 சதவீதமும் அதிகம். இந்தியா – சிங்கப்பூர் இடையே, தொழில், வர்த்தகம் வளர்ந்து வரும் நிலையில், கல்வி, மருத்துவம், சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக இரு நாடுகளை சேர்ந்தோர் விமானத்தில் பயணிக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதனால் சிங்கப்பூரில் இருந்து ஜெய்ப்பூர், லக்னோ, சூரத் உள்ளிட்ட மேலும் பல நகரங்களுக்கு நேரடி விமான சேவையை விரிவுபடுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டில் மார்ச் மாத இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் இருந்து 49 வெளிநாடுகளில் உள்ள 160 நகரங்களுக்கு, 100 விமான சேவை நிறுனங்கள் மூலம், ஒவ்வொரு வாரமும் 7,400 விமான சேவை வழங்கப்படுகிறது.
வியட்னாம், ஆஸ்திரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மேலும் பல நகரங்களுக்கு சிங்கப்பூரில் இருந்து நேரடி விமான சேவை புதிதாக துவங்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
