கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளதாக விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை, இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV ஏவுகணை வாகனங்கள் மூலம் மொத்தம் 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் மூன்று இந்திய செயற்கைக்கோள்கள் வணிக அடிப்படையில் ஏவப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள் உட்பட 34 நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. அமெரிக்கா – 232, இங்கிலாந்து – 83, சிங்கப்பூர் – 19, கனடா – 8 என, மொத்தம் 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இதன் மூலம், இந்தியா 1,243 கோடி ரூபாய் (143 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான அந்நிய செலாவணி வருவாயைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியான வெற்றிகரமான முயற்சிகளால், இந்தியா தற்போது ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாறியுள்ளது. தற்போது, இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளது.மேலும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதையும், 2040-க்குள் முதல் இந்தியரை சந்திரனுக்கு அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
