உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதற்கான முன்னெடுப்பாக, நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது, கொடிப்பட்டமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. காலை 9.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரன் சம்ஹாரம், வரும் 12ம் தேதி தசரா (விஜயதசமி) அன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். “ஓம் காளி ஜெய் காளி” என்ற கோஷம் முழங்க, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழா நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் . குறிப்பாக, விழாவின் முக்கிய நிகழ்வான மஹிஷாசூரன் சம்காரம், வரும் தசரா, 12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்கரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.