2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை விளையாட வேண்டும். இதில், அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் பட்டம் வெல்வார். இந்நிலையில், போட்டியின் 10 சுற்றுகள் முடிவில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார். நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் பெறும் 7-வது பட்டம் ஆகும். இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், தோல்வியடைந்ததால் 3-வது இடத்திற்கு சென்றார். கருவானா 2-வது இடத்தை பிடித்துள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம், கருவானா 15.5 புள்ளிகளுடனும் 2-வது இடம், குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 4-வது இடத்திலும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்திலும், சீனாவின் வெய்யி கடைசி இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

