தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான முழக்க போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, மற்றும் அமமுக பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அரசியல் நோக்கத்திற்காக நான் இங்கு வரவில்லை. எங்களுக்கு தேவை சமூகநீதி, உரிமை மற்றும் நியாயம். 45 ஆண்டுகளாக எங்கள் மருத்துவர் அய்யா போராடி வருகிறார். எங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேவை. இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சட்டம், அதிகாரம், நிதி ஆகியவை இருந்தாலும், முதல்வருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மனம் இல்லை.” வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சாதிவாரி கணக்கெடுப்பை அறிவிக்க வேண்டும், மேலும் ஒரு மாதத்திற்குள் அதை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு இதனை அறிவிக்காவிட்டால் , தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என அவர் எச்சரித்துள்ளார்.
