காலநிலை மாற்றத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பார் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள கடல் பகுதியில் சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை, அலுங்காமை என இவ்வகை ஆமை இனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகளிலிருந்து 45 நாட்களில், ஆமை குஞ்சுகள் வெளியேறி கடலுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு கடந்த 2 மாதங்களில் 1,500 முட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒரு ஆமை மட்டுமே 200 முதல் 300 முட்டை வரை இடும் தன்மை உடையது. இந்நிலையில் வெறும் 64 குஞ்சுகள் மட்டும் கிடைத்துள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாலிநோக்கம் கடற்கரையில் முட்டைகளில் இருந்து வெளிவந்த 64 ஆமை குஞ்சுகளை வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.