வரும் அக்டோபர் 2-ம் தேதி, புதன்கிழமை, ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானத்தில் நிகழும். இந்த நிகழ்வு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம், நிலா சூரியனை முழுமையாக மறைக்க முடியாததால், பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியனின் சுற்றிலும் ஒரு நெருப்பு வளையம் தோன்றும். இதன் மூலம், வானத்தில் ஒரு அழகான காட்சி உருவாகும். இந்த ஆண்டு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9.13 மணிக்கு ஆரம்பித்து, அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு நிகழும், இது நெருப்பு வளையம் போல தோன்றும். தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காணலாம். வட அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களும், அண்டார்டிக்கா பகுதிகளும் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்திய நேரப்படி இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் இதனை காண முடியாது என கூறப்பட்டுள்ளது.