உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று முக்கிய இயக்கங்களை உருவாக்கியுள்ளது.முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் மூத்த அரசு செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்களுக்கு உச்சி மாநாடு நடைபெறும்.

