அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவ வருகிறது. இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 5ம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4ம் தேதி படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மீது சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடினார். பிறகு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.