உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முந்தைய முறையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, 140-க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருந்தன, ஆனால் தற்போது வெறும் 93 நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 2022 பிப்., 24-ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. இதையடுத்து போர் தொடங்கி மூன்றாண்டுகள் நேற்று (பிப்.24) நிறைவடைந்தது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டிவருகிறார். அதன் நிமித்தமாக அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் மேற்கொண்டார். போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும் – ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில், ஐ.நா. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான பதற்றங்களை குறைத்து, போரினை அமைதியான முறையில் தீர்க்கும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
