சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்; பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் செய்திமடல் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக சென்னை – நெல்லை மற்றும் சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் விரைவு ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் வந்தே பாரத் என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் சொகுசு ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை – சென்னை, உதய்பூர் – ஜெய்ப்பூர், ஐதராபாத் – பெங்களூரு, விஜயவாடா – சென்னை, பாட்னா – ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா – பூரி, ராஞ்சி – ஹவுரா என ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு நண்பகல் 12.30 மணியளவில் இந்த ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் 11 மாநிலங்களில் ரயில்களின் சேவை மேம்படும். இந்த புதிய ரயில்கள் மூலம் 9 வழித்தடங்களில் பயண நேரம் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை குறையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 25 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்றைய தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகள் டிக்கெட் எடுத்து நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணிக்க அனுமதியில்லை எனக் கூறப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரசில் உள்ள 8 பெட்டிகளிலும் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், ஒன்றிய அரசின் பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், ரயில்வே ஊழியர்கள், வங்கி மற்றும் தபால்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் சென்னை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயிலின் முதல் பயணம் என்பதால் தெற்கு ரயில்வே 12 இடங்களில் பயணிகள் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த துவக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் முருகன், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்பி ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல்வகாப், மேயர் பி.எம்.சரவணன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர். நண்பகல் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 1.28 மணிக்கு கோவில்பட்டிக்கும், பிற்பகல் 2.18 மணிக்கு விருதுநகருக்கும், 2.55 மணிக்கு மதுரைக்கும் போய் சேர்ந்தது.
மாலை 4.13 மணிக்கு திண்டுக்கல்லுக்கும் போய் சேர்கிறது. இன்று இரவு சென்னை வந்தடைகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து நாளை நெல்லைக்கு திரும்ப வருகிறது. வரும் செவ்வாய்கிழமை விடுமுறையாகும். வரும் 27ம் தேதி புதன்கிழமை முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான இயக்கத்தை தொடங்குகிறது. அதன்படி தினமும் காலையில் 6 மணிக்கு நெல்லையில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், விருதுநகருக்கு காலை 7,13 மணிக்கும், மதுரைக்கு காலை 7,50 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 12 மணிக்கும், தாம்பரத்திற்கு பிற்பகல் 1.13 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கு போய் சேரும்.
மறுமார்க்கமாக சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் (எண்.20631) மதியம் 2.50 மணிக்கு சென்னையில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடையும். இந்த ரயில் தாம்பரத்திற்கு 3.13 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 4.35 மணிக்கும், திருச்சிக்கு 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கும், நெல்லைக்கு 10.40 மணிக்கும் வந்து சேருகிறது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு 6 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ஆயிரத்து 665 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3 ஆயிரத்து 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலுக்கு தீபாவளி, பொங்கல் தினத்தை ஒட்டிய முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. மற்ற தினங்களுக்கான டிக்கெட்டுகளும் விரைவாக விற்பனையாகி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக மதுரைக்கு தெற்கே நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயில்கள் தேவை என குரல் கொடுத்து வருகின்றனர். பயணிகளின் கனவு நனவாகும் வகையில் இன்று முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *