
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல உயிர்வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு, நாட்டின் உயரிய அறிவியல் அங்கீகாரமான ‘விக்னன் ரத்னா’ விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வழங்கி கௌரவித்தார்.
மஞ்சளில் காணப்படும் ‘குர்குமின்’ என்ற மூலக்கூறின் சிகிச்சைப் பயன்களை அவரது குழு ஆய்வு செய்தது. அவரது பணிக்காக பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றார்.
தற்போது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்
. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான ‘விக்னன் ரத்னா’ விருதை தமிழகத்தைச் சேர்ந்த 86 வயதான கோவிந்தராஜன் பத்மநாபன் பெற்றார்.
நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேசிய அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகள் இனி ‘ராஷ்ட்ரிய அறிவியல் புரஸ்கார்’ என்ற பெயரில் நான்கு பிரிவுகளாக வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு குறிப்பிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 56 பேர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 32 பேர் மற்றும் ஒரு அமைப்பு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லஷ்மணன் முத்துசாமி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம், கேரளாவின் திருவனந்தபுரம் CSIR இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் உள்பட 13 பேருக்கு ‘விக்னன் ஸ்ரீ’ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் முதல் ராஷ்ட்ரிய விஞ்ஞானி விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.

