பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டின் பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கான இடமாகும். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த 65 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டு வரும் இக்குழுவினர், இன்று காலை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து புலிப்பாணி ஆசிரமத்திலிருந்து அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்து சென்றனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். . இதன்பின் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜப்பான் பக்தர்களுடன் தமிழக பக்தர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

