அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசின் முடிவுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டம் கலவரமாக மாறியது. லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
