சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தனக்கு பரிசளித்த 25 லட்ச ரூபாய் நிதியை, தான் படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த மாதம் இரண்டாம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு- மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், அந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்ச ரூபாய் வீதம் பரிசுத் தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்கள் அறிவாற்றலுக்கு அளவுகோல் இல்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக தமிழக அரசு இதை வழங்குகிறது. இதை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்கு மேலும் நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் விஞ்ஞானி வீரமுத்துவேல், தான் படித்த பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சென்னை ஐஐடி உள்ளிட்ட நான்கு கல்வி நிறுவனங்களுக்கு அவற்றைச் சம பாதியாக பிரித்து நன்கொடையாக வழங்கியுள்ளார்.