குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம்,புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது ,அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், மீதம் விமானத்தில் பயணித்தவர்கள் பெரும்பாலானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 11 சிறார்கள், 2 குழந்தைகளும் விமானத்தில் இருந்துள்ளனர். மிக அனுபவம் வாய்ந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் உயிரிழந்த 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இவ்விபத்தில் உயிரிழந்தார். விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும், விமான விபத்தில் சேதமடைந்த மருத்துவ கல்லூரி விடுதியை சீரமைக்க டாடா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
