மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பெண்கள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர், ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்’’ பல்லாயிரக்கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்.
மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ்நாடு என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மதுரைதான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால்மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கிய கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின் நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும் அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.
மதுரை என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக முக்கியமான விழா

  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா.
  • அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா.
    அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா’’ என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும்.
    1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக்கொள்வார். ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லாகுளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர் கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது “கோவிந்தா கோவிந்தா” என்ற சரணகோஷமும், வேட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும். மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள்.
    அழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ணப்பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும் அழகரின் பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப் புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
    அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • பச்சைப் பட்டு கட்டி வந்தால், நாடு செழிப்பாக இருக்கும்.
  • சிவப்புப் பட்டு கட்டிவந்தால், அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது, நாட்டில் அமைதியும் இருக்காது.
  • வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால், நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
  • மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.
    இப்படி நம்பிக்கை இருப்பதால் `ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே, மானாமதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *