கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார்.சிறிது நேரம் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்த பின்பு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கார் மூலமாக கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல பூம்புகார் படகு போக்குவரத்துக்கு கழகத்தின் தனி படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். இன்று மாலை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 45 மணி நேரம் தியானம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் மட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடலோர பாதுகாப்பு ஏடிஜிபி சந்தீப் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பும், தென்மண்டல ஐ.ஜி கண்ணன் மற்றும் டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி சுந்தரவேலன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 11 எஸ்.பிக்கள் கொண்ட 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் முறையாக பிரதமர் மோடி கடலுக்குள் இருக்கக்கூடிய விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார்.
