இந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் கோடைகால பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு (2024) கோடைக்காலப் பயணம் சுமார் 40% அதிகரித்துள்ளது.
மேலும் நடப்பாண்டு கோடை காலகட்டத்தில், விருந்தோம்பல் மற்றும் பயண சேவைகளுக்கு தேவை வலுவாக உள்ளது. நாட்டில் நடைபெற்று வரும் பொது தேர்தல் காரணமாக கார்ப்பரேட் மற்றும் மீட்டிங்ஸ், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) வணிகத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் ஹோட்டல்களின் ரீடெயில் பிசினஸ் அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த கோடையில் மக்கள் கடற்கரை இடங்கள், மலைவாசஸ்தலங்கள் போன்ற தங்களுக்கு விருப்பமான ஹாலிடே பிளேஸ்களுக்கு போட்டி போட்டு செல்கின்றனர். இந்திய ஹோட்டல் அசோசியேஷன் தலைவரும், ராடிசன் ஹோட்டல் குழுமத்தின் தலைவருமான (தெற்காசியா) KB Kachru பேசுகையில், நாட்டின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது பகுதியில் கொளுத்தும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மலை பகுதிகளுக்கு செல்கின்றனர். அதே போல் நகரங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள சுற்றுலா அல்லது விடுமுறை தலங்களுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு கோடைகால பயணத்தில் 30 முதல் 40 சதவீதம் அதிகரிப்பு இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே ஓயோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மொத்த leisure புக்கிங்ஸ்களில் 53% இடங்கள் கடற்கரைகள் ஆகும். இது கோடை மாதங்களில் கூட கடலோர இடங்களுக்கான பயண தேவையை வெளிப்படுத்துகிறது. மறுபுறம், மலைப்பகுதிகளுக்கான புக்கிங்ஸ் 47% ஆக உள்ளன. கோவா மிகவும் பிரபலமான கடற்கரை இடமாக உள்ளது, அதை தொடர்ந்து வர்கலா, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளன என்றார்.