2025 ஆம் ஆண்டின் நியூயார்க்கில் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது. செம்மா , நியூயார்க் நகரின் கிரீன்விச்சில் அமைந்துள்ள தென்னிந்திய உணவகம் ஆகும். இந்த உணவகம் சுவைக்கும் ,புதிய உணவு வகைகளுக்கும் மற்றும் மிச்செலின் நட்சத்திர நிலைக்கும் புகழ்பெற்றது. தி நியூயார்க் டைம்ஸின் படி நியூயார்க்கில் உள்ள 100 சிறந்த உணவகங்களின் பட்டியலில் இந்தாண்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது செம்மா உணவகம். பாரம்பரிய உணவுகளில் புதிய உணவுகளை பிஃயூஷன் ஆக அறிமுகப்படுத்துவதில் பிரபலமாகி சிறந்து விளங்கி வருகின்றது.
தி நியூயார்க் டைம்ஸின் இந்த தரவரிசை 20,000 க்கும் மேற்பட்ட உணவகங்களின் நம்பகத்தன்மை, வாடிக்கையாளர் சேவை, புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு, “செம்மா” உணவகம் தி நியூயார்க் டைம்ஸின் தரவரிசையில் 7 இடத்தில் இருந்து தற்போது 1ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரோனி மஜும்தார் மற்றும் சிந்தன் பாண்டியா ஆகியோரால் நிறுவப்பட்ட, உணவு குழுவின் ஒரு பகுதியாக செம்மா உணவகம் உள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் குமார் உணவகத்தின் செஃப் ஆக அசத்தி வருகிறார். இந்த உணவகத்தின் பிரபலமான உணவுகளாக பொடி தோசை, திண்டுக்கல் பிரியாணி, பணியாரம், மட்டன் சுக்கா போன்ற பாரம்பரிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பாரம்பரிய தென்னிந்திய சுவை மூலம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களையும் ஈர்த்துள்ளது செம்மா உணவகம்.
