முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட உள்ளது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும்.
இந்நிலையில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.