திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள கோரிக்கையில், திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும், ஒரே ஒரு திரையுடன் இருக்கும் பெரிய திரையரங்கை 4 திரைகள் வரை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் , திரையரங்குகளில், திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் என்றும், தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முதலமைச்சரிடம் முன்வைத்தனர்.
முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏழு நாள் கொண்டாட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினர்.