இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தில் நதிக்கரையோர கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒரு வழக்கமாகும். மாதம் தோறும் வரும் அமாவாசையன்று, மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதற்கேற்ப, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில், திருச்செந்தூர் முதலிய பல புனித தளங்களில் நீராடி, அரிசி, காய்கறி, கீரை போன்ற பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி, மறைந்த முன்னோர்களை நினைத்து, எள் தண்ணீரை நீரில் விட்டு, சூரிய பகவானுக்கு தீபம் காட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று தமிழ்நாடு முழுவதும் பல புனித நீர்நிலைகளில் ஏராளமானோர் தர்பணம் கொடுத்தனர்.