இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் மற்றும் எல்இடி பல்புகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் பரவலாக விற்பனையில் உள்ளன. இதன் மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடாரின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், ஆய்வில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் ஒன்று அல்லது இரண்டு சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறார்கள், 21 சதவீதம் பேர் 5 சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் , 4 சதவீதம் பேர் 6-10 சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றும், மற்றும் 2 சதவீதம் பேர் 10 சீன தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 79 சதவீத குடும்பங்கள் குறைந்தது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை ஏதொரு வடிவத்தில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாதனங்கள் தொடர்பான சீன செயலிகளில் பயனர் தகவல்களை, குறிப்பாக வீடியோ மற்றும் போட்டோ போன்றவற்றை சீன அரசு கண்காணிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கான காரணம், பெரும்பாலும் இந்திய குடும்பங்களின் அனைத்து தரவுகளும் சீனாவில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுவதுதாகவும். பயனர் ஒருவர் பழைய தகவல்களை மீட்டெடுக்க விரும்பினால், அது சீன சர்வர் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனால், இந்த நிலைமை இந்திய குடும்பங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என லோக்கல் சர்க்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

