மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் 26ம் தேதி இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை ஆரம்பித்து 10.40 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின், 11 மணிக்கு 2வது கால பூஜை தொடங்கி 11.40 மணிக்கு நிறைவடைகிறது. 12 மணிக்கு 3வது கால பூஜை ஆரம்பித்து 12.40 மணிக்கு முடிகிறது. கடைசி 4வது கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணிக்கு நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறும். மேலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் போன்ற உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறும். சிவராத்திரியையொட்டி, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
