இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை தசரா என்ற பெயரில் அறியப்படுகிறது, குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் தசரா விழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி தேவி துர்க்கைக்கு ‘ கர்பா’ பாடலை எழுதியுள்ளார். கர்பா என்பது பாரம்பரிய குஜராத்திய நடனமாகவும், நவராத்திரி காலத்தில் பல இடங்களில் இந்த நடனம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நவராத்திரியின் புனிதமான நாளை குறிப்பிட்டு அன்னை துர்கையின் மீது உள்ள பக்தி மூலம், பக்தர்கள் பல்வேறு வழிகளில் வழிபாடு செய்கிறார்கள். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில், ‘ஆவதி கலாய்’ என்ற தலைப்பில் ஒரு கர்பா பாடலை எழுதியுள்ளேன். நமக்கு அன்னை துர்கையின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். நாட்டு மக்களுக்கு நவராத்திரி பண்டிகையின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறந்த நாளில் அனைவரது வாழ்க்கையிலும் வளம் பெருகட்டும் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.