உலகில் உள்ள பண்டைய பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது: ஏப்ரல் 18-ம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களை பார்வையிடும் அனைவரிடமும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தை புரிந்துகொள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் 3,698 நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்கள் உள்ளன.நுழைவுக் கட்டணத்தை நீக்குவதன் மூலம், அந்த நாளில் அதிகமான மக்கள் அவற்றைப் பார்வையிட வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம், நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
