பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; நாட்டின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தாா். அதன் பிறகு அவருக்கு எதிராக தேசத் துரோகம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மிக முக்கியமாக பிரதமராக இருந்த போது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறுத்தி வைத்த மேல்முறையிட்டு நீதிமன்றம், இம்ரான் கானை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
இருந்தாலும், தனது ரகசியக் காப்புறுதியை மீறி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை 14 நாள்களுக்கு சிறைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடா்ந்து 3 முறை உத்தரவிட்டது. அதைடுத்து, மேல்முறையீட்டு உத்தரவுக்குப் பிறகும் அவா் தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தச் சூழலில், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரானும், குரேஷியும் குற்றவாளிகள் என்று தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கில், இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.