தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயரத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் – ஒரு வருடகாலத்தில் இது இரண்டாவது முறை

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.
புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்க அளவின் அடிப்படையில் மின் கட்டணத்தை 4 புள்ளி 70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.